ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் தர ஸ்கிரிப்ட் வித்தியாசமாக இருக்கவேண்டும் இயக்குனர் பாலாஜி மோகன்
டைட்டில் மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதாது ஸ்கிரிப்டும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றார் பாலாஜி மோகன்.
சித்தார்த் நடித்த ‘காதலில் சொதப்புவது எப்படி‘ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் அடுத்து ‘வாய்மூடி பேசவும்‘ என்ற படத்தை இயக்குகிறார். இப்படம்பற்றி பாலாஜி மோகன் கூறியதாவது:
காதலில் சொதப்புவது எப்படி படத்துக்கு பிறகு அடுத்த ஸ்கிரிப்ட்டுக்காக யோசித்துக்கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கும் ஒருவர் திடீரென குரலை இழந்துவிட்டால் என்னவாகும் என்று தோன்றியது. ஃப்ளு ஜூரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திடீரென குரல் பறிபோகிறது என்ற ஒருவரி கதை உருவானது. அதை வாய் மூடி பேசவும் ஸ்கிரிப்ட் ஆக்கினேன். கதையின் தன்மை தலைப்பில் வெளிப்பட வேண்டும் என்பதால்தான் இப்படியொரு டைட்டில் வைக்கப்பட்டது. மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் ஹீரோ. நஸ்ரியா ஜோடி.
டைட்டில் மட்டும் வித்தியாசமாக இருந்தால்போதாது ஸ்கிரிப்ட்டும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறேன். இது ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தரும். சினிமா ஒரு படைப்புத் தொழில் அதில் புதிய முயற்சியாக இருக்கும். அனிரூத் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஆடியோவை டைரக்டர் மணிரத்னம் வெளியிட்டு பாராட்டியது மறக்க முடியாது. இவ்வாறு பாலாஜி மோகன் கூறினார்.