மும்பை:இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிலா.எஸ்.ஜே.சூர்யா இயக்கிய ‘அன்பே ஆருயிரே‘ படத்தில் அறிமுகமானவர் நிலா. ‘ஜாம்பவான்‘, ‘மருதமலை‘, ‘காளை‘, ‘கில்லாடி‘ உள்ளிட்ட பல்வேறு படங்கள் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். மீரா சோப்ரா என்ற பெயரில் இந்தி படத்தில் அறிமுகமாகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது
தமிழில் நான் நடித்த பல படங்களில் ஹிட் ஆனது. ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும் இதுதான் தமிழில் நான் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்று எண்ணுவேன். மொழி தெரியாத இடத்தில் சிக்கிக்கொண்ட ஒரு உணர்வு எனக்கு இருந்தது. அங்கு தமிழ், தெலுங்கு மட்டுமே பேசுவார்கள். ஆங்கிலம் பேசினால் பலருக்கு புரியாது. நம் நடிகர்களுடன் (இந்தி நடிகர்கள்)பணியாற்ற வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக இருந்தது. ‘நீ வலுக்கட்டாயமாக தமிழில் நடிக்க வந்திருக்கிறாய், இந்திக்கு போனாலும் அப்படித்தான் இருப்பாய்‘ என்று எனது தோழிகள் சொல்வார்கள். ஆனால் இந்தி படங்கள்தான் எனக்கு பொருத்தமான இடம். தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைப்பார்கள்.
தற்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் ‘கேங்க் ஆப் கோஸ்ட் டு டே‘ இந்தி பட தயாரிப்பாளர் ரத்தன் எதிலும் தலையிடுவதில்லை. எல்லா நட்சத்திரங்களையும் பாராபட்சம் பார்க்காமல் மரியாதையுடன் நடத்துவார்கள். தமிழில் பெரிய நடிகரை மட்டும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள் மற்றவர்களை கண்டுகொள்ளமாட்டார்கள். இப்போது மும்பையில் நான் தங்கி இருந்தாலும் எனக்கு இங்கு யாரையும் பழக்கம் கிடையாது. ஒரு புதுமுகமாக அறிமுகமானாலும் எல்லோருக்கும் இந்தி தெரிகிறது. அவர்களுடன் சிரமமில்லாமல் பேச முடிகிறது. இந்தியில் நடிக்க தொடங்கிவிட்டேன். இனி மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன்.இவ்வாறு நிலா கூறினார். திடீரென்று தமிழ் திரையுலகினர் மீது நிலா சரமாரி புகார் கூறி இருப்பது கோலிவுட்டில் அதிர்ச்சி அளித்துள்ளது.