உலகிலேயே அபாயகரமான காற்று மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில் ஈரான் முதல் இடம் லூதியானாவுக்கு 4வது இடம்
பாரிஸ்:உலக சுகாதார நிறுவனம் 2011ம் ஆண்டு நடத்திய ஆய்வில் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றில் அபாயகரமான அளவில் மாசு கலந்திருக்கும் நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. காற்றில் 20 மைக்ரோ கிராம் வரை மாசு கலந்திருக்கலாம். அதற்கு மேல் மாசு கலந்திருந்தால் அது அபாயகரமானது என்று உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையில் நடத்திய ஆய்வில் 372 மைக்ரோகிராம் மாசு கலந்திருக்கும் ஈரானின் ஆவாஸ் நகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக 279 மைக்ரோகிராம் அளவில் மங்கோலியாவின் உலான் பதோர் நகரமும், 254 என்ற அளவில் ஈரானின் சனன்தாஜ் நகரமும், 4வது இடத்தில் 251 மைக்ரோ கிராம் என்ற அளவுடன் இந்தியாவின் லூதியானா மற்றும் பாகிஸ்தானின் குவெட்டா நகரமும் இடம் பிடித்துள்ளன.
5வது இடத்தில் 229 மைக்ரோ கிராம் அளவுடன் ஈரானின் கெர்மான்ஷா, 6வது இடத்தில் 219 மைக்ரோகிராம் என்ற அளவில் பாகிஸ்தானின் பெஷாவர், 7வது இடத்தில் 216 என்ற அளவுடன் போட்ஸ்வானாவின் கபோரோனே, 8வது இடத்தில் 215 என்ற அளவில் ஈரானின் யாசுஜ் நகரம் 9வது இடத்தில் 209 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியாவின் கான்பூர், 10வது இடத்தில் 200 மைக்ரோ கிராம் என்ற அளவில் பாகிஸ்தானின் பெஷாவர் நகரம் இடம் பிடித்துள்ளன. தவிர ஆப்ரிக்க நாடுகளில் காற்று மாசு அதிகம் உள்ளது.
இதன் காரணமாக ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் சுவாச கோளாறு மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களால் இறக்க நேரிடுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.