‘உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்’ அதிமுக பிரசாரத்தில் பரிதி கொடுத்த அதிர்ச்சி
சின்னமனூர்:தேனி தொகுதியில் அதிமுக பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என கேட்டது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக பார்த்திபன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினர் ஒரு வாரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நேற்று கீழப்பூலாநந்தபுரத்தில் இருந்து வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார். நகர மன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் இவருடன் பிரசாரத்தில் பங்கேற்றனர்.
அப்போது வாக்காளர்களை பார்த்து, உதய சூரியனுக்கு உங்கள் வாக்குகளை போடுங்கள் என்றார். அதை கேட்டு கட்சியினர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இதேபோல் செக்காமுக்கு பகுதியிலும் முன்னாள் அமைச்சர், உதயசூரியனுக்கே ஓட்டு கேட்டார். இவ்விரு இடங்களிலும், தவறாக சொல்லிட்டேன்.. மன்னிச்சுக்குங்க என சமாளித்தபடி தொடர்ந்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் திமுக தலைவர்கள் யாரையும் எந்த விமர்சனமும் செய்யவில்லை. கண்ணாடி முக்கு, முத்தாலம்மன் கோயில் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இவர் பிரசாரம் மேற்கொண்டார்.