தஞ்சை:தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, சேலம், வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 10 மாநகராட்சிகள் இருந்தன. தற்போது தஞ்சை, திண்டுக்கல் நகராட்சிகள், மாநகராட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர் ஜெயலலிதா கடந்த 19ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மேயராக சாவித்ரி கோபாலும், துணை மேயராக மணிகண்டனும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் மேயர், துணைமேயருக்குரிய அங்கிகளை அணிந்திருந்தனர். செங்கோலும் வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்த மாமன்ற கூட்டத்தில், தஞ்சையை 11வது மாநகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மேயர் சாவித்ரி கோபால் முதல் கையெழுத்து போட்டார். தொடர்ந்து மாநகராட்சி வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கப்பட்டது.
இதேபோல் 12வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திண்டுக்கல்லில் மேயராக மருதைராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது நடந்த கூட்டத்தில், மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் மேயர் மருதைராஜ் முதல் கையெழுத்திட்டார்.