சிறப்பு முகாமுக்கு டாக்டர்கள் சென்றதால் காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 ஆயிரம் நோயாளிகள் தவிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் சிறப்பு முகாமுக்கு சென்றுவிட்டதால் இன்று காலை சிகிச்சை பெற வந்த 2 ஆயிரம் நோயாளிகள் தவித்தனர்.காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு உள் நோயாளியாக 700 பேர் சிகிச்சை பெறுகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் சுமார் 32 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில், காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் சிறப்பு மருத்துவமுகாம் நடத்தப்படுகிறது. இதற்கு வருகை தரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் அனைவரும் சென்றனர். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் மட்டுமே உள்ளார். இதனால் இன்று காலை சிகிச்சை பெற வந்திருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுபற்றி நோயாளிகள் கூறுகையில், ‘தூரத்தில் இருந்து சிகிச்சை பெற வந்துள்ளோம். இங்கு வந்தபிறகுதான் டாக்டர் இல்லை என்று கூறுகின்றனர். முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் சிகிச்சை பெற வந்திருக்க மாட்டோம்‘ என்றனர்.