சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 1லட்சம் பேர் எழுதுகிறார்கள் முறைகேடுகளை தடுக்க கலெக்டர் அறிவுரை
சென்னை:சென்னை மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் பிளஸ்2 தேர்வும், 57 ஆயிரம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வும் எழுத உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிகிறது. அதேபோல பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகின்றன. மேற்கண்ட தேர்வுகளில் சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 53 ஆயிரத்து 357 மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
அவர்களில் 24608 பேர் மாணவர்கள். 28749 பேர் மாணவியர். பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னையில் மொத்தம் 57171 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 27 ஆயிரத்து 994 பேர் மாணவர்கள். 29177 பேர் மாணவியர். தேர்வுகள் நடத்துவது தொடர்பாக சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள், தேர்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
தேர்வுகள் நடக்கும் நேரத்தில் உரிய போக்குவரத்து வசதி, தடையின்றி மின்சாரம், தேர்வில் முறைகேடுகள் இல்லாமல் நடக்க முதன்மைக் கல்வி அலுவலர், ஆய்வு அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கவேண்டும். மேற்கொண்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.