சென்னை: பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரி தெரிவித்தார். தமிழகத்தில் இந்த வருடம் பருவ மழை முழுமையாக பெய்யவில்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு முழு கொள்ளவை எட்டவில்லை. குடிநீர் பிரச்னையை சமாளிக்க, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் பெறப்படுகிறது. துவக்கத்தில் குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், பூண்டி ஏரிக்கு, தற்போது தினமும் 500 கன அடிக்கும் அதிகமாக கிருஷ்ணா தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி 502 கன அடி தண்ணீர் வந்துள்ளது. ஜனவரி 10ம் தேதி வரை 1200 மில்லியன் கன அடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. இன்றைய நிலவரப்படி புழல் ஏரியில் 2,141 மில்லியன் கன அடியும், பூண்டி ஏரியில் 586 மில்லியன் கன அடியும், தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 733 மில்லியன் கன அடி, சோழவரத்தில் 83 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.
இது தவிர கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம், சென்னையில் குடிநீர் சப்ளை நடந்து வருகிறது. தற்போது சென்னை மாநகருக்கு தினமும் 600 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணா தண்ணீர் 500 கன அடிக்கும் அதிகமாக வந்துக் கொண்டிருப்பதால் தொடர்ந்து 600 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. கோடை காலத்திலும் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.