திருச்சி:திருச்சி விமான நிலைய கழிவறையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இதை கடத்தி வந்தவர் யார் என்று தீவிர விசாரணை நடக்கிறது.துபாயில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் உஷார் ஆனார்கள். இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானம், அதில் வந்த பயணிகள், அவர்களது உடமைகளையும் அதிகாரிகள் சோதனை போட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் உள்ள பயணிகளிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நடந்து கொண்டிருந்தபோதே சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த 3 விமானங்களிலும் மொத்தம் 450க்கும் அதிகமானோர் இருந்தனர். அவர்களிடம் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து பயணிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து விமான நிலைய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை போட்டனர். ஆண்கள் கழிவறையின் வெஸ்டர்ன் டாய்லெட் பாக்சை திறந்து பார்த்த போது அதற்குள் 4 பார்சல்கள் இருந்தது. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். ஒவ்வொரு பார்சலிலும் 8 தங்க கட்டிகள் வீதம், மொத்தம் 32 தங்க கட்டிகள் இருந்தது. அவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடை உள்ளது. மொத்தம் 3 கிலோ 200 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி. இந்த தங்க கட்டிகளை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த பயணி, அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பயந்து அவற்றை கழிவறையில் பதுக்கி வைத்து விட்டு சென்றுள்ளார். கடத்தி வந்தவர் யார் என தெரியவில்லை. கழிவறைக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.