சென்னை: உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காதலர்கள் வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை பரிமாறி கொள்வது வழக்கம். மேலும் சினிமா தியேட்டர்கள், மால்கள், பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஜோடிகளாக சென்று கொண்டாடுவார்கள். சென்னையில் மெரினா கடற்கரை, எலியட்ஸ் பீச், கோவளம் பீச்களிலும் ஷாப்பிங் மால்களிலும் காதலர்கள் படையெடுப்பு நாளை வழக்கத்தை விட ஜோடிகள் வருகை அதிகம் இருக்கும்.
மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் சில அமைப்புகள் காதலர் தினத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள இந்த கொண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. காதலர் தினத்தில், ஓட்டல், பொழுது போக்கு மையங்களில் நெருக்கமாக காதல் ஜோடிகளை அடித்து உதைப்பதும், அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. சென்னையிலும் அது போன்ற அசம்பாவிதம் நடைபெற்று விடக் கூடாது என்பதில் போலீசார் அதிக கவனமுடன் உள்ளனர். அதன் முன்னோட்டமாக, உளவு பிரிவு போலீசார் மூலம் காதலர் தினத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் உள்ளதா என்று கண்காணிக்கப்பட்டது. அது போன்ற அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொழுதுபோக்கு மையங்கள், மெரினா கடற்கரை உள்பட பொது இடங்களில் காதலர்களிடம் அத்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரித்துள்ளார். அதே போல் காதல் ஜோடிகளும் எல்லை மீற வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.