சுவர் ஏறி குதித்து வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற ஆசாமி அமெரிக்காவில் பரபரப்பு
வாஷிங்டன்:அமெரிக்காவில் அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் சுவர் ஏறி குதிக்க முயன்ற ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரத்தில் அதிபர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை உள்ளது. இங்கு நாள் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். வழக்கம் போல் நேற்று போலீசார் வெள்ளை மாளிகையை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் வெள்ளை மாளிகையின் சுற்று சுவரில் ஏறி தாண்டி குதிப்பதை போலீஸ்காரர் ஒருவர் பார்த்துள்ளார். உடடினயாக பணியில் இருந்த மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்தனர். அங்கு சுவர் ஏறி குதித்த ஆசாமியை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.
அந்த நபர் 2 மர்ம பைகளை வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்ததால் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். ஆசாமியிடம் இருந்து மிக கவனமாக அந்த பைகளை கைப்பற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த ஆசாமி யார்? எதற்காக வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவ முயன்றான் என்பது குறித்து அமெரிக்க புலனாய்வு படையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.