ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க சதியா? குண்டு மிரட்டல் விடுத்து விமானத்தை கடத்த முயற்சி துருக்கியில் பரபரப்பு
இஸ்தான்புல்:துருக்கியில் விமானத்தில் குண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டி பயணி ஒருவர் விமானத்தை ரஷ்யாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உக்ரைன் நாட்டில் உள்ள கார்கோவ் நகரத்தில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 110 பயணிகள் பயணம் செய்தனர். இதுகுறித்து துருக்கி நாட்டு போக்குவரத் துறை செயலாளர் ஹபீப் சோலுக் கூறுகையில், விமானத்தில் இருந்த பயணி ஒருவன் எழுந்து திடீரென கூச்சலிட்டான். விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகவும் தான் சொல்லும்படி விமானத்தை ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரை நோக்கி செலுத்தும்படியும் விமானிகளுக்கு உத்தரவிட்டான். பயத்தில் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர். உடனடியாக விமானி சாதுர்யமாக கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவலை அனுப்பினார்.
உடனடியாக பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். விமானிகளின் காக்பிட் அறைக்குள் அந்த ஆசாமி நுழைய முடியாதபடி கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. பயணி உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். இதற்கிடையில் விமானம் பத்திரமாக துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு படையினர் ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர் என்றார்.
ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெற்று வரும் சோச்சி நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் விமானம் மூலமாகவோ, வெடிகுண்டுகளை நிரப்பிய வாகனங்கள் மூலமாகவோ தற்கொலை படை தாக்குதலை நடத்தலாம் என்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. விமானத்தை கடத்த முயன்ற ஆசாமியிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் துருக்கி மற்றும் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.