மாணவியிடம் சில்மிஷம் தனியார் பள்ளி நிர்வாகியை செருப்பால் அடித்த பெண்கள் சேலத்தில் பரபரப்பு சேல
சேலம்:சேலத்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த தனியார் பள்ளி நிர்வாகியை, பெண்கள் செருப்பால் அடித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் சொர்ணபுரி அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜா (எ) பழனிசாமி (40). அப்பகுதியில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவர், டியூஷனுக்கு செல்லும் மாணவிகளை தினமும் பின்தொடர்ந்து ஆபாச வார்த்தைகள் பேசி சில்மிஷம் செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது. நேற்று மாலை கிரிஜா (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் ஜேசுராஜா வீட்டுக்கு சென்றனர். அதை பார்த்த ஜேசுராஜா, வீட்டின் மாடிக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதுபற்றி தகவலறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வெளியே வருமாறு சத்தமிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் போலீசாரும் அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. இரவு 7 மணி முதல் 9.30 வரை சத்தம் போட்டும் எந்த பலனும் இல்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், வீட்டு சுவர் ஏறி குதித்து மாடிக்கு சென்று கதவை உடைக்க தொடங்கினர். அப்போது ஜேசுராஜா திடீரென மாடியில் இருந்து குதித்து ஓட ஆரம்பித்தார். அவரை மக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஆவேசமாக இருந்த பெண்கள் அவரை செருப்பால் அடித்தனர். பின்னர் ஒருவழியாக போலீசார் அவரை மீட்டு சூரமங்கலம் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.