வேலூர்:வேலூரில் பாஜ மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், மதுரை பால்காரர் சுரேஷ், பரமக்குடி முருகன் உட்பட இந்து இயக்க பிரமுகர்கள் கொலை வழக்கில் தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகிய 2 பேரிடம் மட்டும் வேலூர், சேலம் மற்றும் ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கைது நடவடிக்கையின்போது வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த பன்னா இஸ்மாயிலை மருத்துவ சிகிச்சை முடிந்ததும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், வேலூர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் தீவிரவாதி பன்னா இஸ்மாயிலை அடையாளம் காட்டும் நிகழ்ச்சி நேற்று வேலூர் மத்திய சிறையில் வேலூர் ஜேஎம்.1 மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி முன்னிலையில் நடந்தது. கொலையாளிகளை நேரில் பார்த்த சாட்சிகள் 7 பேரை வேலூர் சிபிசிஐடி போலீசார் தனி வேன் மூலம் நேற்று மாலை 3 மணியளவில் அழைத்து வந்தனர். அப்போது மாஜிஸ்திரேட் முன்னிலையில் சாட்சிகள், கொலையாளிகளை அடையாளம் காட்டினர். இந்நிகழ்ச்சி மாலை 5.45 மணி வரை நீடித்தது.
குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்பில் சாட்சியம் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தீவிரவாதிகள் அடையாளம் காட்டும் நிகழ்ச்சி காரணமாக சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.