புதுடெல்லி:அருணாச்சல் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் நிடோ தனிம் கடந்த 29ம் தேதி டெல்லியில் சில கடைக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை டெல்லி ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் டெல்லி போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி நேற்று பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்Õ என உறுதி அளிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது.
மாணவரின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கடைக்காரர்கள் அடித்ததால்தான் மாணவர் உயிரிழந்தாரா என்பது உடல் பரிசோதனையில் உறுதியாக தெரியவில்லை என்றும் உடல் உள் உறுப்புகள் பரிசோதனையில் உண்மையான காரணம் தெரிய வரும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவரின் உள் உறுப்புகள் சிபிஐயின் தடய அறிவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என போலீஸ் தரப்பு வக்கீல் தயான் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.எஸ். என்ட்லா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்த நிலையிலும் உங்களால் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. டெல்லி காவல் துறையின் உள்கட்டமைப்புகள் இன்னும் ஆதி காலத்திலேயே உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கையுடன் நாளை புதிதாக பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.