ஷேர் ஆட்டோ டிரைவருக்கு போலீஸ்காரர் சரமாரி அடி காவல் நிலையம் முற்றுகை
தண்டையார்பேட்டை:ஷேர் ஆட்டோ டிரைவரை போலீஸ்காரர் சரமாரியாக தாக்கியதில் 3 பல் உடைந்து ரத்தம் கொட்டியது. அவ ரை கைது செய்ய கோரி காவல் நிலையத்தை சக ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ராஜ் (27). ஷேர் ஆட்டே டிரைவர். நேற்று மாலை யானைக்கவுனி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது பின்னால் போலீஸ்காரர் ஒருவர் பைக்கில் வந்தார். திடீரென ஆட்டோ டிரைவர் பிரேக் போட்டுள்ளார். இதனால் ஆட்டோ மீது பைக் மோதி யது. இதில், டிரைவர் ராஜை சத்தம் போட்டுள்ளார் போலீஸ்காரர். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
‘நானே போலீஸ்காரன். என்னையே எதிர்த்து பேசுகிறாயா என ராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு 3 பல் உடைந்து ரத்தம் கொட்டியது. அலறி துடித்தார். இதை பார்த்த சக ஆட்டோ டிரைவர்கள் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே போலீஸ்காரர், அருகில் இருந்த கொண்டிதோப்பு காவலர் குடியிருப்புக்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், 50க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ டிரைவர்கள் திரண்டு ஏழுகிணறு போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ராஜை தாக்கிய போலீஸ்காரரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் யார் என விசாரித்து வருகின்றனர்.