திருவொற்றியூர்:மைத்துனியை பலாத்காரம் செய்ய முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். மாதவரத்தில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மாதவரம் டெலிபோன் காலனி முதல் தெருவில் உள்ள அபார்ட்மென்டில் வசித்தவர் மேத்யூ பின்னோராஜ் (33), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் அண்ணா நகரில் உள்ளது. மனைவி ஹேமா (30), மாதவரம் பால் பண்ணை அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு மெர்லின் ஜோசப் (8) என்ற மகன் உள்ளார். ஹேமாவின் தந்தை ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கோபால், அம்மா பாக்யலட்சுமி ஆகியோர் இறந்து விட்டனர். ஹேமாவின் சகோதரி சுகன்யாவுக்கு திருமணமாகி எருக்கஞ்சேரியில் கணவருடன் வசிக்கிறார். மற்றொரு சகோதரியான ஹரிப்பிரியா (23) ஹேமா வீட்டிலேயே தங்கி படித்து வருகிறார். ஹரிப்பிரியா பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிக்கிறார்.
மேத்யூவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் கலாட்டா செய்துள்ளார். நேற்றிரவும் வழக்கம் போல மது வாங்கி வந்தார். 10 மணியளவில் மேத்யூ மது அருந்த ஆரம்பித்தார். அருகில் ஹேமா இருந்தார். நள்ளிரவு 12 மணி வரை மது குடித்துள்ளார். போதை தலைக்கு ஏறியதும், குளிர்பானத்தில் மது கலந்து ஹேமாவை குடிக்க வைத்து மயக்கம் அடைய வைத்தார் மேத்யூ. பின்னர் ஹரிப்பிரியா படுத்திருந்த அறைக்குள் நுழைந்து அவரை எழுப்பினார். திடுக்கிட்டு எழுந்த ஹரிப்பிரியா போதையில் மேத்யூ இருந்ததை பார்த்து பதற்றம் அடைந்தார். திடீரென ஹரிப்பிரியா மேல் பாய்ந்த மேத்யூ அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதை சற்றும் எதிர்பாராத அவர், மேத்யூவின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். எனினும் விடாமல் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றதால் மேத்யூவை ஹரிப்பிரியா கீழே தள்ளினார். போதையில் இருந்ததால் மேத்யூ கீழே விழுந்தார். அந்த நேரத்தில் அங்கு கிடந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மேத்யூவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார் ஹரிப்பிரியா. இதில் ரத்தம் பீறிட்டது. அலறி துடித்த மேத்யூ சிறிது நேரத்தில் இறந்தார்.
உடனே பயத்தில் கதவை திறந்து வெளியே ஓடி வந்த ஹரிப்பிரியா, வெளியில் மயங்கி கிடந்த அக்காவை எழுப்பி கொலை விவரத்தை தெரிவித்து கதறி அழுதார். அதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று கணவரின் சடலத்தை பார்த்து கதறினார் ஹேமா. எருக்கஞ்சேரியில் வசிக்கும் மேத்யூவின் தந்தையான ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஷோபன்ராஜ், அம்மா லில்லி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பதறியடித்து கொண்டு வந்தனர். பின்னர் மாதவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு வந்தார். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். பின்னர் ஹரிப்பிரியாவை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.