திருப்பதியில் ரத சப்தமி விழா 7 வாகனத்தில் சுவாமி வீதி உலா பிப்.6ம் தேதி நடக்கிறது
திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் 6ம் தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று மலையப்ப சுவாமி பிரம்மோற்சவ நாட்களில் 7 வாகனங்களில் 4 மாட வீதியில் வலம் வருவார். அன்று காலை முதல் இரவு வரை இந்த உற்சவம் நடைபெறும். இதை தரிசிக்க பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து திருமலையில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார்.
பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சுவாமியை தரிசிக்க காத்திருக்கும் 4 மாட வீதியிலும் தேவையான தடுப்பு வேலிகள் அமைக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு இல்லாமல் வரிசையில் செல்லும் விதமாகவும், சக்கர ஸ்நானம் நடைபெறும் ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு விஜிலென்ஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுவதால் அதை காண அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். எனவே அன்றைய தினம் அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் முதியோர், மாற்று திறனாளிகள், 1 வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.