நள்ளிரவில் யார் துணையுமின்றி, எந்த பயமும் இல்லாமல் ஒரு பெண் பாதுகாப்பாக செல்லும் காலம் எப்போது வருகிறதோ, அப்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும். நாடு விடுதலையடைந்து 66 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அந்த சுதந்திரத்தை அடையவில்லை. பெண்கள் பாதுகாப்புக்காக எத்தனையோ சட்டங்கள் கொண்டு வந்த பின்பும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறைந்ததாக தெரியவில்லை. சமீப காலமாக, பாலியல் கொடுமை சம்பவங்கள் அதிகரித்ததாகவே தெரிகிறது. இந்த சூழ்நிலையில், பெண்கள் பாதுகாப்பு பற்றி யார் எந்த கருத்து சொன்னாலும் அது சர்ச்சைக்குள்ளாகி விடுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் ஆஷா மிர்ஜே, மகாராஷ்டிர மாநில மகளிர் கமிஷன் உறுப்பினராக உள்ளார். இவர் அந்த கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் பேசிய கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அவர் என்ன பேசினார்...
‘டெல்லியில் பாலியல் கொடுமைக்குள்ளாகி பலியான மருத்துவ மாணவி நிர்பயா எதற்காக தனது ஆண் நண்பருடன் இரவு 11 மணிக்கு படம் பார்க்க போனார்? மும்பையில் ஆள்நடமாட்டமே இல்லாத சக்தி மில்ஸ் பாழடைந்த கட்டிடத்திற்கு மாலை 6 மணிக்கு இளம்பெண் பத்திரிக்கையாளர் ஏன் போனார்? பெண்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களது உடைகள், நடத்தை மற்றும் கூந்தல் அலங்காரம் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத இடங்களுக்கு இரவு நேரத்தில் செல்லக் கூடாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’
இதுதான் அவர் பேசியது. இந்த பேச்சு நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு எதிராக அவர் பேசி விட்டது போல் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கற்காலத்தில் இருந்ததை போல் பெண்களை அடக்கி வைக்காமல், அவர்களுக்கு எல்லா துறைகளிலும் முழு சுதந்திரம் கொடுத்து சம உரிமை அளிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது. டாக்டர் ஆஷா மிர்ஜேவுக்கும் அதில் உடன்பாடு இருக்கும். அந்த வகையில் பெண்கள் உடை அணிவதிலும், விருப்பப்பட்ட இடங்களுக்கு செல்வதிலும் யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. ஆனாலும், டாக்டர் ஆஷா மிர்ஜே சொன்ன கருத்துக்கள், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நல்லெண்ணத்தில் சொல்லப்பட்டவை என்பதை உணர வேண்டும். அவரது நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு, அவரது கருத்தை ஆரோக்கியமான விவாதத்திற்கு உட்படுத்த பெண்கள் அமைப்புகள் முன்வர வேண்டும்.