நாளை தை அமாவாசை ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கு ஏற்பாடுகள்
திருவையாறு: நாளை தை அமாவாசை தினம் என்பதால் காவிரி கரையில் பல இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் சடங்குகள் நடைபெறும். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் தர்ப்பணம் கொடுப்பதற்காக நாளை அதிகாலையிலேயே மக்கள் கூடுவார்கள். காவிரியில் நீராடி, ஈரத்துணியுடன் அங்குள்ள புரோகிதர்களுக்கு அரிசி, காய்கறி, கீரை, தட்சணை கொடுத்து மந்திரம் ஓதிய பின்னர் கோயில்களுக்கு சென்று வழிபடுவர். நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலிலும், ராமேஸ்வரம் கடலிலும் தர்ப்பணம் கொடுக்கும் சடங்குகள் நடைபெறும்.
மேட்டூர் அணை மூடப்பட்டு விட்டதால் தற்போது திருவையாறு, ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. மக்கள் ஆற்றில் மூழ்கி குளிக்க முடியாத நிலை உள்ளது. ஏராளமானோர் கூடுவதால், காவிரி கரையோரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும். காலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின் கால பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 7 மணிக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்கள் தீர்த்தவாரி நடைபெறும். தை அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜன. 30) அதிகாலை முதல் இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும். கோயிலுக்குள் பக்தர்கள் புனித நீராடுதலும், சுவாமி தரிசனமும் தடையின்றி நடைபெறும். இரவில் ஸ்ரீராமர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளல் மற்றும் வீதியுலா நடைபெறுகிறது.