தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் ஆண்டுதோறும் ‘பஸ் டே’ கொண்டாடுவது வழக்கம். ஆண்டுக்கு ஒரு நாள் பஸ்சுக்கு பூப்போட்டு அலங்கரித்து அதில் மாணவர்கள் உற்சாகத்துடன் ஊர்வலமாக செல்வதுதான் பஸ் டே. இந்த கொண்டாட்டத்தில் மாணவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சி மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வரை ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால், சமீப காலமாக மாணவர்களின் செயல்பாடுகள் தேவையற்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தி விட்டன. இதனால், மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையில் நீதிமன்ற தடையையும் மீறி அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று பஸ் டே கொண்டாடியுள்ளனர். முறைப்படி போக்குவரத்து கழகத்தில் அனுமதி பெற்று பஸ் வரவழைத்து, அவர்கள் பஸ் டே கொண்டாடவில்லை. அயனாவரத்தில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி சென்ற மாநகர பஸ்சை வழிமறித்து, அதிலிருந்த பயணிகளை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளனர். பின்னர், பஸ்சின் முன்பக்க கண்ணாடியில் மாலை போட்டு, பேனர் வைத்து ஊர்வலம் புறப்பட்டுள்ளனர். இந்த தகவல் கிடைத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் சமரசம் பேசியுள்ளனர். ‘பஸ் டே’ கொண்டாட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை மீறி கொண்டாட கூடாது’ என்று எச்சரித்துள்ளனர்.
அதையும் மீறி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்த வழியாக வந்த ஆம்புலன்சுக்கு கூட வழி விடாமல் மாணவர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். அதன்பின், போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர். போலீசாரின் தடியடியில் ஒரு மாணவன் காயமடைந்திருக்கிறான். காலை நேரத்தில் சென்னையின் மையப்பகுதியான அண்ணா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் சென்னையில் அடிக்கடி நடக்கின்றன. இவற்றால் போலீசாருக்கு மேலும் தலைவலி. இவற்றை எப்படி தடுப்பது, மாணவர்கள் பிரச்னையை எப்படி அணுகுவது என்பதில் உயர் அதிகாரிகள் இது வரை கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. மாணவர்களை நல்வழிப்படுத்த அவர்களை பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் அதிகாரிகள் திட்டமிடல் வேண்டும். அதே போல், அத்துமீறும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயக்கம் காட்ட கூடாது.