ஒரு காலத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதை பார்த்திருக்க முடியும். இன்றைய தலைமுறையினருக்கு இதை சுற்றுலா செல்லும்போதுதான் காட்ட வேண்டிய நிலை. தண்ணீர் நிறைந்த வாய்க்கால்கள், நீரோடைகள், குளங்கள், ஏரிகள், தடுப்பணைகள் ஆகியவற்றை எல்லாம் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது.
குடிதண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலையில், சென்னை உள்ளிட்ட பெருநகர மக்கள் உள்ளனர். இந்த பரிதாப நிலை இன்னமும் சில மாவட்டங்களில் வரவில்லை. கன்னியாகுமரி போன்ற சில பகுதிகளில் வாய்க்கால்களில் இப்போதும் தண்ணீர் ஓடுகிறது. கடவுள் அளித்த வரம். இதில் கவலைக்குரிய விஷயம், சில இடங்களில் வாய்க்கால்களில் ஓடும் தண்ணீர் யாருக்கும் பயனின்றி கடலில் கலப்பதுதான். இதுபோன்ற ஒரு வாய்க்கால் இம்மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள வடக்கு வாய்க்கால் தண்ணீர், தேங்காப்பட்டணம் கடலில் கலக்கிறது. வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை, அனைவருக்கும் பயன்படும்படி செய்ய, அங்கு தடுப்பணை கட்டலாம் என்று பல ஆண்டுகளாக, பல்வேறு தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்துள்ளது. வேளாண் பொறியியல் துறை இங்கு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. அதன்பேரில், தடுப்பணை கட்ட ரூ.33.75 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது. சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கவில்லை என்ற கதையாக, அரசு நிதி ஒதுக்கீடு செய்தபின்னரும், அங்கு தடுப்பணை கட்டும் பணிகள் நடக்கவில்லை.
கவலை அடைந்த விவசாயிகள், வேளாண் பொறியியல் துறையினரிடம் கேட்டபோது, அங்கு தடுப்பு அணை கட்டவே முடியாது என்று புதுக்கதை கூறியுள்ளனர். இதனால் அரசுக்கே நிதியை திருப்பி அனுப்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். வேளாண் பொறியியல் துறையினர், யாரையும் கலந்தாலோசிக்காமல், அரசு நிதியை திருப்பி அனுப்பி உள்ளனர். விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், விவசாயிகள் கொட்டித் தீர்த்துள்ளனர். இதுபற்றி விசாரித்த கலெக்டர், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகிய இருவரையும் உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அரசிடம் இருந்து ஒரு திட்டத்துக்கு நிதியை பெறுவது எவ்வளவு கஷ்டம் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? ஜீவ ஆதாரமான தண்ணீர் தேக்கத்துக்கு தடுப்பணை கட்டத்தானே விவசாயிகள் கோரியுள்ளனர். இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கலந்தாலோசித்து இருந்தாலே நல்ல தீர்வு கிடைத்திருக்குமே? அதைவிட்டு சர்வசாதாரணமாக நிதியை திருப்பி அனுப்பிய இந்த அதிகாரிகளை என்னவென்று சொல்வது?