ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் துவக்கம்
திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முதல் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. வரும் 31ம் தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. பகல்பத்து உற்சவம் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே திருமொழி 2 ஆயிரம் பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9 வரை கேட்கிறார். வரும் 26ம் தேதி வரை தாயார் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை இல்லை. 26ம் தேதி ஸ்ரீரங்க நாச்சியார் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி, அரையர் சேவையுடன், முத்துக்குறி வியாக்யானம், அபிநயங்கள், அரையர் தீர்த்தம், ஸ்ரீசடகோபம் சாதித்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பகல்பத்து உற்சவம் நிறைவடைகிறது.
ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித் திருநாள் வரும் 27ம் தேதி தொடங்கி 31 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. ஸ்ரீரங்க நாச்சியார் ராப்பத்து உற்சவத்தையொட்டி கோயில் உள்ளே போடப்பட்டுள்ள கொட்டகையில் தீர்த்த வினியோகம் நடத்திய பின்னர் கத்யத்ரய மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு எழுந்தருள்வார். ஸ்ரீரங்க நாச்சியார் தினமும் மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு திருவாய்மொழி மண்டபமான கத்யத்ரய மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அலங்காரம், கோஷ்டி வகையறா முடிந்து இரவு 8.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.