தியாகராஜர் ஆராதனை விழா திருவையாறில் துவங்கியது 21-ல் பஞ்சரத்ன கீர்த்தனை
தஞ்சை:தஞ்சை மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜரின் 167வது ஆராதனை விழா நேற்று மாலை மங்கல இசையுடன் தொடங்கியது.
தொடக்க விழா நிகழ்ச்சியில், தியாக பிரம்ம மகோத்சவ சபா செயலாளர் ஏ.கே.பழனிவேல் வரவேற்றார். பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் ரங்கராஜன் குத்துவிளக்கேற்றி வைத்து பேசுகையில், ‘‘எழுத்துக்கும், வசனத்திற்கும் இலக்கணம் இருக்கிறதோ அதுபோல இசைக்கும் இலக்கணம் உள்ளது. அதை அறிந்து கொண்டால் இசையை இன்னும் அதிகளவில் அறியமுடியும். ரசிக்க முடியும். அழகு என்பது பார்ப்பவர் கண்ணில் இருக்கிறது என்பதுபோல இசையின் இனிமை கேட்பவர் செவியில் இருகுகிறது’’ என்றார்.
தஞ்சை கலெக்டர் சுப்பையன், தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.ஆர்.மூப்பனார், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் மனைவி சுனிதா, சுரேஷ் மூப்பனார், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ரங்கராஜன், சபா பொருளாளர் கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆராதனை விழா 21ம் தேதி வரை நடக்கிறது. நிறைவு விழாவாக 21ம் தேதி 9 மணி முதல் 10 வரை கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்கள் பங்குபெறும் பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.