வடலூர் சத்திய ஞானசபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
வடலூர்:வடலூர் சத்திய ஞானசபையில் 143வது தைப்பூச ஜோதி தரிசன விழா அருட்பெருஞ் ஜோதி மகா மந்திரம் ஒலிக்க இன்று காலை துவங்கியது. ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் வடலூர் நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைபூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும். 143வது ஜோதி தரிசனம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் துவங்கியது. ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர். இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கும், பிற்பகல் 1 மணிக்கும் ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தென்னக ரயில்வேவும் கூடுதல் ரயில்களை இயக்கியுள்ளன.காலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தபோதிலும், பிற்பகலில் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது.