சபரிமலையில் இன்று படி பூஜை 3 நாள் நடக்கிறது
திருவனந்தபுரம்:பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த 30ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஐயப்பன், ஜோதி வடிவில் 3 முறை காட்சி கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து சபரிமலையில் அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை இன்று (16ம் தேதி) தொடங்கி வரும் 18ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பிறகு படி பூஜை நடைபெறும். 18 படிகளிலும் பட்டுத்துணி விரிக்கப்பட்டு பூ மாலை அலங்காரத்துடன் விளக்குகள் ஏற்றப்பட்டு படி பூஜை நடத்தப்படுகிறது. இதைக்காண சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 18ம் படி அருகே முன்னதாகவே வந்து கூடி உள்ளனர்.