தியாகராஜர் ஆராதனை விழா திருவையாறில் நாளை துவக்கம் ஜி.கே.வாசன், ரங்கராஜன் பங்கேற்பு
திருவையாறு: திருவையாறில் தியாகராஜரின் 167வது ஆராதனை விழா நாளை மாலை துவங்குகிறது. இதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகளின் 167வது ஆராதனை விழா நாளை மாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமையில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் ரங்கராஜன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைக்கிறார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கலெக்டர் சுப்பையன் முன்னிலை வகிக்கின்றனர். மகோத்சவ சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்கிறார். மற்றொரு செயலாளர் ராஜாராவ் நன்றி கூறுகிறார். நள்ளிரவு 12 மணி வரை இசை நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி காலை 9 மணிக்கு 2ம் நாள் நிகழ்ச்சி துவங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகிறது. வளரும் கலைஞர்களுக்கு 10 நிமிடமும், பிரசித்தி பெற்ற கலைஞர்களுக்கு 20 நிமிடமும் ஒதுக்கப்படும்.
நிகழ்ச்சிகள் தொய்வின்றி நடைபெற 2 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேடையில் நிகழ்ச்சி முடிந்ததும், அடுத்த மேடையில் நிகழ்ச்சி துவங்கும். 5ம் நாளான 21ம் தேதியுடன் நிகழ்ச்சி நிறைவுபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு திருமஞ்சன வீதியில் தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து அவரது சிலை ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி மேளதாளம் முழங்க தியாகராஜரின் நினைவிடத்துக்கு வருவார்கள். அங்குள்ள தியாகராஜரின் சிலை, நினைவிடத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அது முடிந்ததும் 9 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பாடப்படும். இந்தியா முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கலைஞர்கள் 500 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்துவர். 10 மணிக்கு மற்ற கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 2 முதல் 3 மணி வரை சரஸ்வதி ராமநாதனின் இசை சொற்பொழிவு நடைபெறும். இரவு 8 மணிக்கு தியாகராஜர் திருவீதி உலா நடைபெறும். நள்ளிரவு 12 மணியுடன் விழா நிறைவு பெறுகிறது.