மும்பையில் ருசிகரம் 12 லட்சம் கொடுத்து காருக்கு பதிவு எண்1 வாங்கிய தொழில் அதிபர்
மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் வாகனங்களுக்கான பதிவு எண்ணில் பேன்சி நம்பர்களை ஏலம் விடும் முறையை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. எனவே தங்களுக்கு பிடித்தமான நம்பர், லக்கி நம்பர், பேன்சி நம்பர் போன்றவற்றை பெற விரும்புவோர் தாங்கள் கேட்கும் பதிவு எண்ணை வேறு யாரும் கேட்காத பட்சத்தில் போக்குவரத்து துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி பெறலாம்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே எண்ணை கேட்கும் போது ஏல முறையில் வழங்குவது வழக்கம். இந்நிலையில் எண்.1 என்ற கார் எண்ணை ரூ.1 லட்சம் விலை வைத்து மும்பை போக்குவரத்து துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதற்கு கிராக்கி அதிகரிக்கவே இதன் விலையை ரூ.4 லட்சமாக கடந்த ஆண்டு மே மாதம் உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில் தனது காருக்கு எண்.1 வேண்டும் என போவாய் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மும்பை தொழில் அதிபர் விண்ணப்பித்திருந்தார்.
ஏற்கனவே இந்த எண்ணை கேட்டு மேலும் பலர் விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து இவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஏலத்தில் அந்த எண்ணை போவாய் நிறுவன அதிபர் ரூ.12 லட்சம் கொடுத்து வாங்கியதாக போக்குவரத்து துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் சிலர் விண்ணப்பித்திருந்தால் ரூ.15 லட்சம் வரை ஏலம் போக வாய்ப்பு உள்ளது என்றனர். கடந்த 2012ம் ஆண்டு சண்டிகரில் சிஎச்01 ஏஎன்0001 என்ற எண்ணை ஒரு தொழில் அதிபர் ரூ.17 லட்சம் கொடுத்து பெற்றதுதான் இதுவரையில் உச்சபட்ச தொகையாகும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.