புதுடெல்லி: உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் உள்ள மத்திய போலீசில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய போலீஸ் படையில் சிஆர்பிஎப், சிஎஸ்ஐஎப், சாஸ்திர சீமா பால், எல்லை பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லை போலீஸ், அசாம் ரைபிள்ஸ், நேஷனல் செக்யூரிட்டி கார்டு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றின் கீழ் மொத்தம் 9 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ராணுவத்துக்கு அடுத்தபடியாக அதிநவீன ஆயுதங்கள் இந்த படைபிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது. எல்லை பாதுகாப்பு, தேர்தல் பாதுகாப்பு, மத்திய அரசின் தொழில் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு, நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான வேட்டை, மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்போது மாநில போலீசுக்கு உதவி என பல்வேறு பாதுகாப்பு பணிகளை துணை ராணுவம் என்றழைக்கப்படும் மத்திய போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
மத்திய போலீசில் தற்போது 26 ஆயிரம் வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. நக்சல் வேட்டையில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் வீரர்களை மத்திய போலீசில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 38 ஆயிரம் வீரர்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும், எஞ்சிய வீரர்கள் சாஸ்திர சீமா பால், இந்தோ திபெத் எல்லை போலீஸ், எல்லை பாதுகாப்பு படைக்கு பிரித்து கொடுக்கப்படும் என உள்ளதுறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.