Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
13
Dec
போலி நிறுவனத்துக்கு சிபாரிசு லட்சக்கணக்கில் பேரம் 11 எம்.பி.க்கள் சிக்கினர் 2 அதிமுக எம்.பி.க்கள் மறுப்பு


புதுடெல்லி:போலி நிறுவனத்துக்கு சிபாரிசு கடிதம் வழங்க ரூ.50,000 முதல் ரூ.50 லட்சம் வரை பேரம் பேசிய 11 எம்.பி.க்கள் வசமாக சிக்கியுள்ளனர். இப்புகாரில் சிக்கிய 2 அதிமுக எம்.பி.க்கள் தங்கள் மீதான புகாரை மறுத்ததுடன், முதல்வர் ஜெயலலிதாவிடம் விளக்கம் கொடுத்துள்ளனர்.

அரசியல்வாதிகளின் ஊழல்களை கண்டுபிடிக்க பல்வேறு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள், ரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. வங்கிகளில் கறுப்பு பணத்தை எந்தெந்த வகையில் முதலீடு செய்ய உதவுகிறார்கள் என்பதை ரகசிய உளவு நடவடிக்கை மூலம் ‘கோப்ரா போஸ்ட்’ என்ற இணையதளம் வெளிக் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் இதற்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது. பின்னர், உண்மை இருப்பதை அறிந்து இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்தது.

தற்போது, இந்த இணையதளம் சில எம்.பி.க்களிடம் லஞ்சம் பேசி சுற்றி வளைத்துள்ளது. இது குறித்து ‘கோப்ரா போஸ்ட்’ இணையதளத்தின் நிறுவனர் அனிருத்தா பஹால் கூறியதாவது:சில எம்.பி.க்கள் சிபாரிசு கடிதங்களுக்கும் பணம் வாங்குவதை அறிந்து, அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிவு செய்தோம். இதற்கு ‘ஆபரேஷன் பால்கன் கிளாவ்’ என்று பெயரிட்டோம். இதன்படி காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், அதிமுக கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்களை, அவர்களுக்கு நெருக்கமான தரகர்கள் மூலம் எங்கள் நிருபர்கள் தொடர்பு கொண்டனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெட்டெரானியன் ஆயில் கம்பெனியின் பிரதிநிதிகள் என்று எம்.பி.க்களிடம் தங்களை நிருபர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் எண்ணெய் துரப்பன பணி மேற்கொள்ள தங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கடிதம் அளிக்க வேண்டுமென கூறினர்.

இந்த பரிந்துரை கடிதத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று பேரம் பேசினர். இந்த பேரம், ரகசியமாக வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் குரல் தெள்ளத்தெளிவாக பதிவு செய்யப்பட்டது. பரிந்துரை கடிதத்தை தர ரூ.50,000 முதல் ரூ.50 லட்சம் வரை எம்.பி.க்கள் அல்லது அவர்களின் செயலாளர்கள் நிருபர்களிடம் பேரம் பேசினர்.

சில எம்.பி.க்கள் ஒருபடி மேலே சென்று, அந்த நிறுவனத்துக்கு கடைசி வரை உதவி செய்ய முன்வருவதாகவும், வேண்டும் என்றால், எண்ணெய் நிறுவனத்திடம் தாங்களே பேசி காரியத்தை முடிக்கவும் தயார் என்று தெரிவித்தனர். ஒரு எம்.பி.யின் கணவர், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும் இதுகுறித்து பேசுவதற்கு தயார் என்று எங்கள் நிருபரிடம் பேசினார்.

நாங்கள் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு 6 எம்.பி.க்கள் சிபாரிசு கடிதத்தையே தந்துவிட்டனர். எங்கள் ரகசிய உளவு நடவடிக்கையில் சிக்கிய எம்.பி.க்கள் பொள்ளாச்சி கே.சுகுமார் (அதிமுக), சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் (அதிமுக), லாலு பாய் படேல் (பா.ஜ.), ரவீந்திர குமார் பாண்டே (பா.ஜ), ஹரி மான்ஜி (பா.ஜ.), விஸ்வ மோகன் குமார் (ஐ.ஜ.த.), மகேஸ்வர் ஹஜாரி (ஐ.ஜ.த.), புதியோ சவுத்ரி (ஐ.ஜ.த.), கிலாடி லால் பைர்வா (காங்கிரஸ்), விக்ரம்பாய் அர்ஜன்பாய் (காங்கிரஸ்), கைசர் ஜஹான் (பகுஜன் சமாஜ்).இவ்வாறு அனிருத்தா பஹால் கூறினார்.

இதற்கிடையே, கோப்ரா போஸ்ட் புகார் பட்டியலில் சிக்கியுள்ள அதிமுக எம்.பி.க்கள் கே.சுகுமாரும், சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும் தங்கள் மீதான புகாரை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கோப்ரா போஸ்ட் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளனர்.

ஜெயலலிதாவிடம் விளக்கம் பொள்ளாச்சி எம்.பி. சுகுமார் கூறியதாவது:

லஞ்ச பேரத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் என்னால் முடிந்தவரை தொகுதி மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். என் மீதும், நான் சார்ந்துள்ள அ.திமு.க மீதும் அவதூறு பரப்பும் வகையில் சில ஊடகங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறேன். என் தொகுதி மக்களுக்கு, நல்ல காரியம் நடக்க வேண்டும் என யார் வந்து சிபாரிசு கடிதம் கேட்டாலும் நம்பிக்கையின் அடிப்படையில் கையெழுத்து போட்டு கொடுப்பேன்.

 ஒரு வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது பெரிதுபடுத்துகிறார்கள். என்னுடைய உதவியாளர் கடந்த ஆண்டு ஒரு நபரை அழைத்து வந்து, சிபாரிசு கடிதம் கேட்டார். வழக்கம்போல், நம்பிக்கை அடிப்படையில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். நான், இதுவரை யாரிடமும், ஒருபைசாகூட வாங்கவில்லை.  நான், எந்த தவறும் செய்யவில்லை. இதுகுறித்து, முதல்வரிடம் கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளேன். நான், யாரிடமும் பணம் பெறவில்லை என உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு சுகுமார் எம்.பி கூறினார். சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் முதல்வரிடம் விளக்கம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதிமுக எம்.பி.க்கள் பேசியது என்ன?

பொள்ளாச்சி கே.சுகுமார் எம்.பி:

(எம்.பி. உதவியாளர் முன்பாக பேச்சுவார்த்தை)

உதவியாளர்: எங்கள் தேவையை பூர்த்தி செய்யவேண்டும், சரியா?

நிருபர் (சுகுமாரை பார்த்து): ப்ளீஸ் சார், உங்களுக்கு எவ்வளவு வேண்டும்...

சுகுமார்: சரி, நீங்கள்(உதவியாளரிடம்) அவரிடம் பேசுங்கள்

நிருபர்: ரூ.50,000 சார்? சரியா

சுகுமார்: லெட்டர் பேடில்தான் கடிதம் வேண்டுமா?

நிருபர்: ஆமா.... ஆமா....

நிருபர்: இந்த கடிதத்தை படிங்க... இதுமாதிரிதான்.... (மாதிரி கடிதத்தை சுகுமாரிடம் தருகிறார்)

சுகுமார்: மாதிரி கடிதத்தை பெற்று கொண்டு அதை தயாரிப்பதற்காக செல்கிறார்.

சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி:

(நாயர் என்ற ஏஜன்ட் மற்றும் எம்.பி.யின் உதவியாளர் முன்பாக பேச்சுவார்த்தை)

நிருபர்: பரிந்துரை கடிதம் தரணும்னா... உங்களுக்கு கொஞ்சம் பணம் தரணும்னு இவர் (நாயர்) சொன்னார்.

ராஜேந்திரன்: நீங்க கொடுங்க

நிருபர்: எவ்வளவு தரணும் சார்... எனக்கு எவ்வளவுன்னு தெரியலை... அதனாலதான் நானே உங்க கிட்ட வந்தேன்.

ராஜேந்திரன்: (சிரித்துகொண்டே எழுந்து செல்கிறார்)

உதவியாளர்: அவர் எங்க கிட்ட சொல்லிட்டார். நீங்க ஏன் அவரைப்பத்தி கவலைப்படுறீங்க? அவர்கிட்ட நேரடியாக கேட்கிறது சரிபடாது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement