சூறாவளியை நேரில் பார்க்க சென்று ஆபத்தில் சிக்கிய ரிச்சா
மெக்சிகோ:சூறாவளியை நேரில் பார்க்க சென்று ஆபத்தில் சிக்கினார் ரிச்சா.ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ரிச்சா கங்கோபாத்யாய. இவர் சமீபத்தில் மெக்சிகோவில் தங்கி இருந்தார். அப்பகுதியில் சூறாவளி காற்று வீசப்போவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதற்கு பயந்து அறைக்குள்ளேயே முடங்கிவிடுவதற்கு பதிலாக சூறாவளியை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினார் ரிச்சா. ‘டுவிஸ்ட்டர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் சூறாவளியை துரத்திக்கொண்டு ஆராய்ச்சியாளர்கள் பின்தொடர்வதை பார்த்து வியந்த ரிச்சாவுக்கு அவர்களைப்போல் தானும் சூறாவளியை நேரில் பார்க்க விரும்புவதாக உடனிருந்தவர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மெக்சிகோவின் வடகிழக்கு பகுதிக்கு சென்றார். தூரத்தில் நின்றபடி சூறாவளியை ரசித்தார். பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி அவர் இருந்த பகுதியை நோக்கி வந்தது. இதனால் பயந்து நடுங்கினார். திடீரென்று திசை மாறி வேறுபக்கம் சூறாவளி திரும்பியதால் நிம்மதி அடைந்தார். இந்த அனுபவம் திகிலுடன் இருந்தது என தெரிவித்துள்ளார் ரிச்சா.