கதையே இல்லாமல் படம் இயக்குகிறார் பார்த்திபன்
சென்னை:கடந்த 2 வருடமாக படங்களை இயக்காமல் இருந்த பார்த்திபன் தற்போது ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்‘ என்ற பெயரில் புதிய படம் இயக்குகிறார். இதன் தொடக்க விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பார்த்திபன் கூறியதாவது:
திரையுலகில் எனக்கு நண்பர்களே கிடையாது. சினிமாவுக்குள் வருவதற்கு முன் வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டேன். கே.பாக்யராஜிடம் உதவியாளராக சேர்ந்தபிறகு எனக்கு சுபீட்சம் கிடைத்தது. சினிமாவை என்னால் புரட்டி போட முடியும், மற்றவர்களைவிட பிரமாதமாக இயக்க முடியும் என்ற கர்வம் எனக்கு இருந்தது. இதனால் யாரிடமும் வாய்ப்பு கேட்டுபோகவில்லை. அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்பது பிறகுதான் புரிந்தது. இப்போதுகூட எந்த தயாரிப்பாளரிடமும் போய் நான் வாய்ப்பு கேட்பதில்லை.
வித்தியாசமான படம் எடுப்பேன் என்று நம்பி இப்படத்தை தயாரிக்க முன்வந்தார் சந்திரமோகன். அவரிடம் 2 கதைகள் சொன்னேன். பிடித்திருந்தது. அதையே எடுக்கலாம் என்றார். இன்னொரு ஸ்கிரிப்ட் இருக்கிறது. அதில் கதை கிடையாது என்றேன். இது இன்னும் வித்தியாசமாக தோன்றவே இதையே தயாரிக்க முடிவு செய்தார். இப்படத்துக்கு திரைக்கதை மட்டும்தான் அமைத்திருக்கிறேன். கதை என்று தனியாக எதுவும் கிடையாது. ஷூட்டிங்கின்போதுதான் அடுத்த காட்சி என்ன என்பதை முடிவு செய்வேன். வித்தியாசமான படம் என்று பலர் சொல்கிறார்கள். இது உண்மையிலேயே வித்தியாசமான படமாக இருக்கும். அல்போன்ஸ் ஜோசப் இசை அமைக்கிறார் மதன் கார்க்கி பாடல் எழுதுகிறார்.