ஒருநாள் இந்திய அணியை அஸ்வின் வழி நடத்துவார் கவாஸ்கர் கணிப்பு
கொல்கத்தா டெஸ்டில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 52 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். பேட்டிங்கிலும் அவர் தனது திறமையை நேற்று நிரூபித்தார். 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிய இந்திய அணியை அஸ்வினும், ரோகித்தும் சேர்ந்து மீட்டனர். ரோகித் சர்மா சதம் அடித்தார். அவருக்கு துணையாக அஸ்வின் சிறப்பாக ஆடி நேற்றைய ஆட்டநேர முடிவில் 92 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரது சிறப்பான ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
அவர் கூறியது: அஸ்வினும், ரோகித்தும் சேர்ந்து 198 ரன்கள் நேற்று குவித்தனர். இது இந்திய அணிக்கு வலுசேர்த்துள்ளது. அவரது முதல் சதமும் வெஸ்ட் இண்டீசுடன் இதே போன்ற சூழ்நிலையில் தான் அமைந்தது. அவர் நெருக்கடிகளை சுலபமாக சமாளிக்கிறார். பவுலிங்கிற்கு கொடுக்கும் அக்கறையை பேட்டிங்கிலும் அவர் காட்டுகிறார். பேட்டிங்கிலும் முன்னிலை பெற வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார். அஸ்வின் தீவிரமாக பயிற்சி எடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் தனது திறமையை வளர்த்து வருகிறார். ஒருநாள் அவர் இந்திய அணியை வழிநடத்துவார் என்று கூறினார்.