வானில் இருந்து குதித்து 100வது பிறந்த நாளை கொண்டாடிய தாத்தா
லாஸ்ஏஞ்சல்ஸ்:விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தபடி தனது 100வது பிறந்தநாளை கலிபோர்னியாவை சேர்ந்த தாத்தா ஒருவர் கொண்டாடியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா தென் பகுதியை சேர்ந்தவர் வீனன் மேனார்ட் (100). கார் வியாபாரியான இவர், வயது காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இவருக்கு தனது 100வது பிறந்த நாளை விமானத்தில் உயரமான பகுதிக்கு சென்று அங்கிருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தவாறு கொண்டாட வேண்டும் என்று வித்தியாசமாக ஆசை ஏற்பட்டது.
இது குறித்து தனது நண்பர்கள், சகோதர, சகோதரிகளின் மகன்களிடம் கூறியுள்ளார். அமெரிக்க பாராசூட் அசோசியேஷன் இதற்கான அனுமதியை வழங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேனார்ட், லாஸ்ஏஞ்சல்ஸ் தென்மேற்கு பகுதிக்கு விமானத்தில் பறந்து சென்று அங்கிருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரா சூட் மூலம் குதித்து அசத்தினார். அவருக்கு உதவியாக உறவினர் 2 பேர் இருந்தனர்.
இது குறித்து ஸ்கை டைவ் சங்க மேலாளர் கூறுகையில், டாக்டர்களின் ஆலோசனை பெற்று மேனார்ட் பாராசூட் மூலம் குதித்துள்ளார் என்றார்.