மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக் கூடாது. சொந்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பரமக்குடிக்கு ஏராளமானோர் வந்தனர். இதற்காக பரமக்குடிக்கு வரும் வழித்தடத்தில் போலீசார் மாற்றங்களை செய்திருந்தனர். மதுரையில் இருந்து கார் பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வாடகை வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பரமக்குடி நகரின் முக்கிய இடங்களில் 60 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை என ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார். தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது சொந்த ஊரான முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த செல்லூர் கிராம மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் தலைமையில் இன்று காலை 7.40 மணியளவில் முதன் முதலில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி ரவிக்குமார் தலைமையில் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சுந்தர்ராஜ், நகர்மன்ற கவுன்சிலர் முனியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.