ரகசிய திருமணம் நடந்ததா? நடிகை அஞ்சலி விளக்கம்
சென்னை:தனக்கு ரகசிய திருமணம் நடந்ததாக வந்துள்ள செய்தி தவறானது என நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.‘அங்காடி தெரு’, ‘கலகலப்பு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் அஞ்சலி. இவர் ரகசிய திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாக நேற்று பரபரப்பாக தகவல் வெளியானது. இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருமணம் குறித்த செய்திக்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் இருந்து அஞ்சலி இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கற்றது தமிழ்’ படம் தொடங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரித்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. சமீபத்தில் சுந்தர்.சி. இயக்கத்தில் விஷாலுடன் நான் நடித்த ‘மதகஜராஜா’ படத்துக்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகள் வந்தன.
மேலும் அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஒருவருடன் என்னை இணைத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் என்னை பற்றிய செய்திகளுக்கு விளக்கம் கேட்க விரும்பினால், newsfromanjali@gmail என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அஞ்சலி தெரிவித்துள்ளார்.