Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
17
Aug
துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்றகோரி தடையை மீறி திமுக ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது


சென்னை:துறைமுகம்  மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க கோரி, இன்று காலை திமுகவினர் தடையை  மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னை துறைமுகத்தில் தினமும் 3 ஆயிரம்  கன்டெய்னர்கள் கையாளப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றிவரும்  லாரிகள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றன. பகலில் சென்னை மாநகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே,  இரவு நேரங்களில்தான் லாரிகள் துறைமுகத்துக்கு வருகின்றன.  இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

இந்த பிரச்னையை சமாளிக்க மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை அதிவேக பறக்கும் சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சியில்  திட்டமிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து 19 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,815 கோடியில் பறக்கும் சாலை அமைக்கும் பணி  தொடங்கியது. கூவம் ஆற்றங்கரையோரம் மிகப்பெரிய தூண்களை அமைத்து உயர்மட்ட சாலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தை 2010&ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். ஓராண்டு காலம் பணிகள் நடந்தன. இதற்கிடையே, தமிழகத்தில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டம் திடீரென நிறுத்தப்பட்டது. கூவம் நதியில் தூண்கள் அமைக்கப்படுவதால், தண்ணீர் செல்வது  பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கூறி, திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த உத்தரவால்  ஸ்ரீபெரும்புதூரில் ரூ.3,500 கோடியில் கன்டெய்னர் டெர்மினல் அமைக்கும் திட்டம் மற்றும் சென்னை & பெங்களூர் சாலையில் ரூ.500 கோடியில் உலர்  துறைமுகம் அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கும் சூழ்நிலை உருவானது.

மதுரவாயல் & துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, நெற்குன்றத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம்  நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க  தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் இன்று காலையிலேயே நெற்குன்றத்துக்கு புறப்பட்டனர்.
அவர்களை அந்தந்த பகுதிகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த நெற்குன்றம் பாலமுரளி கிருஷ்ணா  தியேட்டர் அருகே கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகவேல் தலைமையில் 300&க்கும் மேற்பட்ட போலீசார்  குவிக்கப்பட்டனர். திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன் (தென்சென்னை),  ஆர்.டி.சேகர் (வடசென்னை), சுதர்சனம் (திருவள்ளூர்)  ஆகியோர் முன்னிலையில் ஏராளமான திமுக தொண்டர்கள் போலீஸ் தடையை மீறி அங்கு  திரண்டனர். அவர்கள் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரியும் தமிழக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள்  எம்எல்ஏக்கள் ப.ரங்கநாதன், பி.கே.சேகர்பாபு, முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.  தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில்  இருந்து திமுகவினர் ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். போலீசார் ஆங்காங்கே வாகனங்களை மறித்து  திமுகவினரை திடீரென கைது  செய்தனர்.

இதைக் கண்டித்து திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் அருகே பூண்டி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், நகர செயலாளர் கா.மு.தயாநதி, முன்னாள்  நகராட்சி தலைவர் பொன்.பாண்டியன் உள்பட 300&க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். ஆவடி சாலை  வேப்பம்பட்டில் திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சண்முகம் உள்பட 60 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.  கனகம்மாசத்திரத்தில் திருத்தணி நகர செயலாளர் சந்திரன், பூபதி உள்பட 30 பேர், திருமழிசை சோதனை சாவடியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர்  ஆதிசேஷன், திராவிடபக்தன் தலைமையில் 160 பேர் உள்பட 3 மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கருணாநிதி கண்டனம்

முரசொலி மாறன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக சார்பில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களே?

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து திமுக சார்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
‘தலைவா’ படம் வெளிவராததால் நடிகர் விஜய், உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே? படைப்பாளி என்ற முறையில்  இதுபற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

மனம் பதைக்கிறேன். இதுபற்றி எழுதியும் இருக்கிறேன்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து என்ன முடிவு  எடுக்கப்பட்டது?கூட்டம் பற்றிய முடிவு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran