சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தனது 51&வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். வேளச்சேரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களுடன் பிறந்தநாள் கேக் வெட்டினார். முரசொலி அலுவலகத்துக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு சென்று திருமாவளவனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். அப்போது திருமாவளவன் பேசியதாவது:
எனது பிறந்த நாளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி இந்த ஆண்டு வரை தொண்டர்கள் பொன் விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதன் நிறைவு விழா வரும் 31&ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடக்கிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
ஏழை எளிய மக்களுக்காக, சமுக நல்லிணக்கத்துக்காக, தமிழக உரிமைகளுக்காக அம்பேத்கர், பெரியார் வழியில் தொடர்ந்து உழைப்பேன் என்ற உறுதியை பிறந்தநாள் செய்தியாக தெரிவித்து கொள்கிறேன். எனது பிறந்தநாளை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி ஏழை எளியோர், முதியோர், ஆதரவற்றோர், மாணவர்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும். மத்திய அரசு கொண்டுவர உள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை வரவேற்கிறேன். அதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும். அதாவது, தானிய கையிருப்பு இல்லாத நேரங்களில் மானிய தொகை வழங்கப்படும் என்பதை நீக்கி, எப்போதும் தானியங்களை வழங்க வேண்டும். நபருக்கு ஐந்து கிலோ அரிசி என்பதை 10 கிலோவாக வழங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
அதைத் தொடர்ந்து, சாந்தோமில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்ற திருமாவளவன், தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பொதுச் செயலாளர் ரவிக்குமார், விடுதலை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.