2016ம் ஆண்டு தேர்தல் அமெரிக்க அதிபர் பதவிக்கு பெண்ணுக்கு வாய்ப்பு கிடைக்குமா? மிஷெல் பரபரப்பு பேட்டி
வாஷிங்டன்:பெண் அதிபரை ஏற்று கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல், பாரடே மேகசின் என்ற பத்திரிகைக்கு சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். அப்போது, உங்கள் வாழ்நாளில் அமெரிக்காவில் பெண் அதிபரை பார்க்க வாய்ப்புள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மிஷெல் கூறுகையில், பெண் அதிபரை அமெரிக்க நாடு ஏற்பதற்கு தயாராக உள்ளது. ஆனால், அந்த உயர்ந்த பதவிக்கு யார் தகுதியானவர்கள் என்பதுதான் கேள்வி என்றார்.
அதிபர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது போன்ற எண்ணம் இல்லை என்று மிஷெல் மறுத்துவிட்டார்.
அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தல் 2016ம் ஆண்டு நடைபெற உள்ளது. அப்போது முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகுறது. அதிபர் ஒபாமா முதல் முறையாக அதிபர் ஏற்ற போது, வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஹிலாரி கிளின்டன். அத்துடன் அமெரிக்க செனட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அரசியல் அனுபவம், உலக நாடுகளின் நிலை குறித்து அதிகம் தெரிந்து வைத்திருப்பவர். அதனால் அவரை மனதில் வைத்து மிஷெல் கருத்து தெரிவித்துள்ளார் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.