21 ஆண்டு தலைமறைவு சந்தன கொள்ளையன் கைது
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட வனத்துறை குடோனில் கடந்த 1992ம் ஆண்டு புகுந்த மர்ம கும்பல், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகளை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். தனிப்படையும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர், கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் கூடலூர் டி.எஸ்.பி திருமேனி தலைமையில் தனிப்படை கேரளா விரைந்தது. அங்கு இடவண்ணா பகுதியில் கூலி வேலை செய்து வந்த, கூடலூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மூசா (47) என்பவரை 21 ஆண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.