சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸ் அதிகாரி படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் வசிப்பவர் அருணா (48). இவர், கிண்டி ரேஸ் கோர்சில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு ரேஸ் கோர்ஸ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியபடி வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே வாட்ச்மேனாக வேலை செய்த சோலைமலை(33) வந்தார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென்று அருணாவின் கழுத்தை அறுத்தார். இதில், சம்பவ இடத்திலேயே அருணா இறந்தார். இதைப் பார்த்த ரேஸ்கோர்ஸ் ஊழியர்கள், சோலைமலையை பிடிக்க முயன்றனர். அவர் தப்பி ஓடியபோது, அந்தப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் சோலைமலையை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
போலீசில் சோலைமலை அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்: சொந்த ஊர் காரைக்குடி. 2001ல் ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் கிளார்க் வேலை செய்தேன். பின் படிப்படியாக செக்யூரிட்டிகளுக்கு அதிகாரியாக பணியாற்றினேன். கடந்த சில மாதங்களுக்கு முன், நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் இடையே சம்பள பிரச்னை தொடர்பாக மோதல் வந்தது. இதனால் ஊழியர்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதனால், நிர்வாகத்துக்கு ஆதரவாக சில மாற்றங்களை அருணா செய்தார். அதன்படி, அங்கு பணிபுரிந்து வந்த 108 தற்காலிக ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கினார். இதனால், இவர் மீது ஊழியர்கள் கோபமாக இருந்து வந்தனர்.
வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் செக்யூரிட்டிகள் எல்லோரையும் வேலையை விட்டு நீக்கி விட்டு, தனியார் நிறுவனத்திடம் செக்யூரிட்டி பணிகளை வழங்கினர். என்னை அதிகாரி பணியில் இருந்து நீக்கி விட்டு, சாதாரண செக்யூரிட்டியாக நியமித்து விட்டனர். இதனால் அதிகாரமும், சம்பளமும் பறிபோனது.
இது எனக்கு வேதனையாக இருந்தது. அதனால், வேலையை விட்டு நின்று விட்டேன். எனக்கு சேர வேண்டிய சம்பளத்தை கேட்டபோது அருணா தரவில்லை. இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். இதற்காக கடையிலிருந்து கத்தியை வாங்கிக் கொண்டு வந்தேன். நேற்று ரேஸ் நடந்ததால் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்களோடு நானும் உள்ளே வந்தேன். அருணாவும் கூட்டம் முடிந்து வெளியே வந்தார். அப்போது, கத்தியால் அருணாவை சரமாரியாக குத்தினேன். கழுத்தையும் அறுத்தேன். இவ்வாறு தனது வாக்குமூலத்தில் சோலைமலை கூறியுள்ளார்.