சென்னை:படத்தில் ஒரு ஜோடி வெற்றி பெற்றால் உடனே ராசியான ஜோடி என்பதா? அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார் சுவாதி. ‘சுப்ரமணியபுரம், ‘போராளி படங்களில் நடித்தவர் சுவாதி. அவர் கூறியதாவது:
மலையாளத்தில் ‘ஆமென் என்ற படம் மூலம் அறிமுகமானேன். பஹாத் பாசில் ஹீரோவாக நடித்தார். இதையடுத்து ‘நார்த் 24 காதம் படத்தில் இணைந்து நடிக்கிறோம். ‘ஆமென் படம் வெற்றி பெற்றவுடன் எங்கள் ஜோடியை ராசியான ஜோடி என்று கூறுகிறார்கள். அதுபற்றி எனக்கு தெரியாது. அப்படி சொல்வதை நிரூபிக்க வேண்டுமென்றால் தற்போது நடிக்கும் படமும் வெற்றிகரமாக ஓட வேண்டும். படம் ஹிட்டானால் ராசி ஜோடி என்று சொல்வது இண்டஸ்ட்ரியில் சகஜம். இதையே காரணமாக வைத்து மற்ற படங்களிலும் ஜோடி சேர்க்கிறார்கள். ஒருவேளை இதுபோல் ஜோடி சேரும் படங்கள் ஆச்சரியம் தரும் வலையில் வெற்றியாககூட அமையலாம்.
‘சுப்ரமணியபுரம்‘ படத்தில் நடித்தபோது தலை முழுவதும் எண்ணெய் தடவி வகிடெடுத்து சீவிய சிகை அலங்காரத்துடன் நடித்தேன். ‘ஆமென் படத்தில் கேரள பெண்கள் கெட்அப்பில் நடித்தேன். தற்போது நடிக்கும் ‘நார்த் 24 காதம்‘ படத்தில் பஸ்சில் செல்லும்போது பார்க்கும் சாதாரண பெண் எப்படி இருப்பாரோ, அதுபோல் நடிக்கிறேன்.