தஞ்சை அரண்மனையில் குளம் கண்டுபிடிப்பு
தஞ்சை:தஞ்சை அரண்மனை வளாகத்தில் கட்டப்பட்ட குளம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியில் தலைநகரமாக விளங்கியது தஞ்சை. கி.பி 1,535&ல் நாயக்கர்களால் தஞ்சை கைப்பற்றப்பட்டது. தற்போதுள்ள அரண்மனை கி.பி 1,550&ல் கட்டப்பட்டது. செவ்வப்பநாயக்கருக்கு பின்னர் தஞ்சையை ஆண்ட மன்னர் கள் அனைவரும் இந்த அரண்மனையிலேயே வசித்து வந்தனர்.
அரண்மனை கட்டப்பட்டபோது, நுழைவு வாயிலை ஒட்டி இடது புறம் 20 அடி ஆழத்திலும், 25 அடி நீளம் மற்றும் அகலத்தில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மன்னர் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.காலப்போக்கில் மண்மூடி குளம் இருந்த அடையாளம் தெரியாமல் பள்ளமாக மாறியது. அரசர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச் சுவரை ஒட்டியிருப்பதால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் இப்பள்ளத்தில் கொட்டப்பட்டு, குப்பைமேடாக காட்சியளித்தது.
அரண்மனை வளாகத்தில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள சுற்றுலாத் துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது தான் குளம் இருப்பது கண்டறியப்பட்டது. சுற்றுலாத் துறை நிதி மூலம் குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. குளத்தை புனரமைக்கவும், அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.