சித்தூர்:தனி தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற ஸ்டிரைக் இன்று 2வது நாளாக நீடிக்கிறது. ஸ்டிரைக் காரணமாக ஒரே நாளில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் இன்று 15வது நாளாக பந்த் நடந்து வருகிறது. இப்பகுதிகளை சேர்ந்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யக் கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசு ஊழியர்கள் 4.5 லட்சம் பேர் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்தனர்.
133 துறை ஊழியர்கள் பங்கேற்றிருப்பதால் அரசு பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளது. பல மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களும் திறக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அனைத்து அரசு துறை அலுவலகங்கள் மூடப்பட்டது. ஸ்டிரைக் காரணமாக ஒரே நாளில் ரூ.150 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலத்தில் சுமார் 13 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் முழுவதுமாக டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முழுவதும் 13 மாவட்டங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலைகள் வெறிச்சோடின. பல இடங்களில் காங்கிரஸ் தலைவர்களின் உருவபொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். ஐதராபாத்தில் உள்ள தலைமை செயலகத்தில் பணியாற்றும் சீமாந்திரா பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை செயலக பணிகளும் பாதிக்கப்பட்டது. 2வது நாளாக இன்றும் ஸ்டிரைக் நீடித்தது. நாளை நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவில் அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கலந்து கொள்வதா? வேண்டாமா என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
திருமலைக்கு பஸ்கள் இயக்கம்
நேற்று திருப்பதி&திருமலை இடையே முற்றிலும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். திருமலையில் இருந்து இயக்கப்பட்ட ஜீப்கள், வேன்கள், வாடகை கார்களில் ரூ.60 முதல் ரூ.150 வரை கட்டணம் செலுத்தி பக்தர்கள் பயணித்தனர்.
முதல்வர் கிரண்குமார் ரெட்டி உத்தரவின்பேரில் சித்தூர் கலெக்டர் சாலமன் ஆரோக்கியராஜ், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எம்.ஜி.கோபால் ஆகியோர் போக்குவரத்து கழக பணியாளர் சங்கத்தினருடன் நேற்றிரவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். திருமலைக்கு செல்லும் பஸ்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கவேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு திருமலைக்கு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக சங்கத்தினர் ஒப்புக் கொண்டனர்.
இதைதொடர்ந்து திருமலை டிப்போவில் உள்ள 107 பஸ்களும், நேற்றிரவு 11 மணி முதல் திருமலையில் இருந்து அலிபிரி பாலாஜி பஸ் நிலையம் வரையும், அலிபிரி பாலாஜி பஸ் நிலையத்தில் இருந்து திருமலைக்கும் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பக்தர்கள் பயணம் செய்தனர்.