மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா மறைமலைநகரில் இன்று மாலை நடக்கிறது
செங்கல்பட்டு:மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா மறைமலை நகரில் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி மறைமலைநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
முன்னாள் பாமக எம்எல்ஏ மூர்த்தி தலைமையில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய 2 ஆயிரம் பேர், திமுகவில் இணையும் விழா மறைமலைநகர் நகராட்சி திடலில் இன்று மாலை நடக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகிக்கிறார். நகர செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் தண்டபாணி, ஆப்பூர் ஊராட்சி தலைவர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் பாமக, வன்னியர் சங்கம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆய¤ரம் பேர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். அவர்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பின்னர், அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சிக்காக நகராட்சி திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மறைமலைநகரில் இருந்து கூடுவாஞ்சேரி வரை மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதத்தில் கொடிகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மறைமலை நகர் நகரமன்ற கவுன்சிலர்கள், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்த ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.