ஜம்மு:ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கிஷ்த்வாரில் கடந்த வெள்ளிக்கிழமை மதக்கலவரம் மூண்டது. இது ஜம்மு பிராந்தியத்தில் பல இடங்களில் பரவியது. இதை தொடர்ந்து நேற்று மேலும் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தில் மொத்தமுள்ள 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையில் மதக்கலவரத்தை கண்டித்து ஜம்மு பிராந்தியத்தில் பாஜ சார்பில் இன்று 3வது நாளாக பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கிஷ்த்வார் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் மீது ஒரு சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து கிஷ்த்வார் நகரில் மதக்கலவரம் மூண்டது. 2 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறுநாள் பாஜ சார்பில் ஜம்முவில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பல இடங்களில் ராணுவம் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியது. இதையும் மீறி அண்டை மாவட்டங்களில் கலவரம் பரவியது. இதை தொடர்ந்து சனிக்கிழமை இரவு ஜம்மு மற்றும் ரஜோரி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று கத்துவா, சம்பா, உதம்பூர், தோடா மற்றும் ரம்பன் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் 8ல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை பாஜ அறிவித்த பந்த் போராட்டம் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜம்மு பிராந்தியத்தில் இன்று 3வது நாளாக பந்த் கடைபிடிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மதக்கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. அரசியல் கட்சிகள் கலவரத்தை ஊக்குவிக்க கூடாது என மாநில முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.