வாஷிங்டன்:இந்திய பீடிகளை விற்பனை செய்யும் 2 வெப்சைட்களுக்கு அமெரிக்க அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அமெரிக்காவில் இந்திய பீடிகள் மற்றும் சிகரெட்டுகளை விற்க, பல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் செயல் பட்டு வருகின்றன. இதை அறிந்த அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பீடி விற்கும் இணைய தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், இந்திய பீடி, சிகரெட்டுகள் முறையான புகையிலை சட்டத்தின் கீழ் தயாரிக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும், உணவு மற்றும் மருத்துவ நிர்வாக துறையிடம், தாங்கள் விற்கும் இந்திய பீடி, சிகரெட்டுகளில் கலப்படம் எதுவும் இல்லை என்ற சான்றும் பெறவில்லை.
இந்த சான்றுக்காக பீடி, சிகரெட்டுகள் ஆய்வு செய்யப்படவும் இல்லை. இந்திய பீடி வகைகள் அதிக நிகோடினும், அதிக கார்பன் மோனாக்சைடும் வெளியாகும் தன்மை கொண்டவை. மேலும் புகையிலை குறித்த எச்சரிக்கை வாசகங்கள் எதுவும் இணையதளங்களில் இடம்பெறவில்லை. புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் உண்டாகும் உடல் குறைபாடுகள், நோய்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்களுடன்தான் இந்த இணையதளங்கள் இந்திய பீடி, சிகரெட்டு விற்பனை குறித்த விளம்பரம் செய்ய வேண்டும். எனவே, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.