ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 21 நாட்களுக்கு பின்னர் ஒகேனக்கல் மீண்டும் களைகட்டி உள்ளது.கடந்த மாதத்தில் கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல்லுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க மற்றும் பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டனர். மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் இல்லாததால் ஒகேனக்கல் களையிழந்து காணப்பட்டது.
தற்போது காவிரியில் நீர்வரத்து குறைந்ததால்தடையை நீக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை குறித்து மக்கள் தொடர்பு அதிகாரி மேனகா, டிஎஸ்பி நடராஜன், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தாசில்தார் தேவிகா, மாவட்ட வன அதிகாரி வரதராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலையில் ஒகேனக்கல்லில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க விதித்த தடை நீக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் உற்சாகம் அடைந்தனர். காவிரி அன்னைக்கு பூஜை செய்து நேற்று மாலை முதல் பரிசல்களை இயக்கினர். மேலும் பரிசல் சவாரி மேற்கொள்ளும் பயணிகள் பாதுகாப்புக்காக நீரில் மிதக்கும் ஜாக்கெட்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியது. 16 கண் மதகு மூடல்
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 14,539 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்காக 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் மட்டம் 119.79 அடியாகவும், நீர் இருப்பு 93.13 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து சரிவால் 120 அடிக்கும் கீழ் நீர் மட்டம் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று மூடப்பட்டது.