குண்டும் குழியுமான சாலையால் பஸ் போக்குவரத்து நிறுத்தம் புழல் பகுதி மக்கள் தவிப்பு
புழல்:சாலை உடைந்து கிடப்பதால் பஸ் போக்குவரத்து நிறுத்திவிட்டனர். இதனால் புழல் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் தவிக்கின்றனர்.
சென்னை மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி புரம், டீச்சர்ஸ் காலனி கடப்பா சாலை செல்கிறது. தற்போது இந்த சாலை பழுதடைந்து, குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. சைக்கிள், பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
இந்த மோசமான சாலையை காரணம் காட்டி கிண்டியில் இருந்து இயக்கப்பட்ட சி70 மாநகர பஸ் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பஸ் கிடைக்காமல் லட்சுமிபுரம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைத்து பஸ் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.