மின் விளக்கு எரிய நடவடிக்கை ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு திமுக வலியுறுத்தல்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில், நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.கூட்டத்துக்கு அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா ஏ.டி.வேலு, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், அபிராமி குமரவேல், மாவட்ட பிரதிநிதி மோகன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சம்சுதீன், பார்த்திபன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எத்திராஜ் வரவேற்றார். பேரூர் பொறுப்பாளர் அப்துல் ரஷித் சிறப்புரையாற்றினார்.
கன்னிகைப்பேர் ஊராட்சி தலைவர் திராவிட பாலு, ஊத்துக்கோட்டை 11வது வார்டு முன்னாள் கவுன்சிலர் பாலசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இளைஞர் அணியினருக்கு உறுப்பினர் அட்டை, ஊத்துக்கோட்டை அண்ணா சிலை 4 முனை சந்திப்பில் உள்ள உயர கோபுர விளக்கை சரி செய்து எரிய வைக்க வேண்டும். 10வது வார்டில் கழிவுநீர் அடைப்பை பேரூராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர். இளைஞரணி அமைப்பாளர் ரகீம் நன்றி கூறினார்.